Monday 9 September 2019

மு.செல்வராசன்


மு.செல்வராசன்
ஒருவர் கடந்து வந்த பாதையிலே கூட நடந்து சென்ற அனுபவம் நமக்கே ஒரு தனிப்பாதை அமைக்க வழிகாட்டிவிடும்.திட்டமிட்டு அல்ல. இயல்பாக.அப்படிச்  சிலரோடு நான் கூட நடந்து சென்றிருக்கிறேன். சிலரை வழிநடத்தியிருக்கிறேன். சிலரால் வழிநடத்தப்பட்டிருக்கிறேன்.கடந்து வந்த பாதையிலே என்று ஒரு நூல் எழுதிய அமரர்.மு.செல்வராசன் தமது சொந்தப் பதிப்பக வாழ்க்கை தொடங்குமுன்  எத்தனையோ ஏற்றஇறக்கங்களைக் கண்டவர். பதிப்பக வாழ்க்கையின் முனைப்பான தருணத்தில் தான் கடந்து வந்த பாதையிலே என்ற நூலை எழுதினார் .அன்று எனக்கும் அவருக்கும் உள்ள உறவு பதிப்பாளர்- எழுத்தாளர் உறவு தான்.
அவர் பதிப்பாளர். நான் எழுத்தாளர்.
அவருக்கும் எனக்குமிடையே தொடர்புகளில் முக்கியமானது  அவரும் நானும் அன்றைய வடஆற்காடு மாவட்டத்தைச் சேர்ந்த வாணியம்பாடி நகருக்கும் அதற்கு 11 கிலோமீட்டர் தொலைவிலிருந்த வெள்ளக்குட்டை கிராமத்திற்கும் இருந்த நெருக்கம் தான். அவர் வாணியம்பாடியில் பிறந்து வளர்ந்து அங்கேயே பள்ளிஇறுதித் தேர்வு வரை படித்தவர். நான் வெள்ளக்குட்டையிலே பிறந்து சென்னைக்கு வந்து சென்னைப்பள்ளிகளிலே பள்ளிஇறுதித் தேர்வு  படித்தவன். நான் அவரை எழுத்தாளராகவோ,பதிப்பாளராகவோ சந்திக்கவில்லை.வேலூரில் பணியாற்றிய என் தம்பி கவிஞர் வசந்தராஜன் வசித்த சுந்தரேசசாமி கோயில் தெருவில் ஒரு விடுமுறையில் நான் தம்பி வீட்டிற்குச்சென்றிருந்த போது அவரைச்சந்தித்தேன். வைரம் பதிப்பகத்தின் வாடகை நூலகத்தில்  தகழி எழுதிய செம்மீன் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பைக்கண்டு அந்தக்கடையில்  வாடகைக்கு வாங்கப்போய்த் தான் சந்தித்தேன்.
அப்போது அவர் சென்னையில் வசித்தார். நான் வெள்ளக்குட்டையில் வசித்தேன். அப்போது அவர் பதிப்பாளர் ஆகவில்லை.  ஊரூராகப் பள்ளிகளுக்குச் சென்று நூல்களை விற்பனை செய்யும் வைரம் பதிப்பகத்தின் விற்பனையாளராக இருந்தார். அப்போதே அவருக்கு திராவிட இயக்கத்தின் பேரில் இருந்த ஈடுபாடோ  வடாற்காடு மாவட்டத்தின் முக்கியப் பிரமுகராக  விளங்கிய முல்லைசத்தி நடத்திய    அச்சகத்தோடு இருந்த தொடர்போ எனக்கு அன்று தெரியாது.
என்னைப்பற்றி அறிந்து வெள்ளக்குட்டைக்கு வந்தார்.  சென்னையில் உள்ள தம் இல்லத்திற்கு வருமாறு அழைத்தார்.
சிறுகச்சிறுக வளர்ந்த அந்த நட்பில் அவர் நாடகம் எழுதி கே.ஆர்.விஜயாவை ஒரு பாத்திரமாக நடிக்க வைத்த கதையும், தி.மு.கவின் ஐம்பெரும்தலைவர்களில் ஒருவராய் விளங்கிய மதியழகனுடன் இருந்த நட்புரிமையோடு கூடிய நெருக்கமும் பின்னால் தான் நான் அறிந்தேன்.
வாழ்க்கையோடு போராடிய வகையில் அவருக்கும் எனக்கும் ஓர் ஒற்றுமை.. அவரும் ஒரு துணிக்கடை ஊழியனாக பணிக்கால வாழ்க்கையைத் தொடங்கினார். நானும் அப்படியே ஒரு துணிக்கடை ஊழியனாகத்தான்  என் பணிக்கால வாழ்க்கையைத்தொடங்கினேன். அவர் வாணியம்பாடித் துணிக்கடை. நான் திருப்பத்தூர்த் துணிக்கடை .அது நீடிக்கவில்லை.
ஓர் எழுத்தாளனுக்கு வேண்டிய எல்லா வாழ்க்கை அனுபவங்களையும் பெற்றிருந்த மு.செல்வராசன் எழுத நேரமில்லாததால்   பதிப்பாளரானார். நூல் பதிப்புத் தொழிலுக்கு அறுபது முதல் எண்பது(1970-80) வரை உள்ள காலகட்டத்தில் நூலகங்களில் எந்தக் கமிஷனும் வாங்காமல், யார் சிபாரிசும் இன்றி ஆயிரம் நூல்கள் வாங்கினார்கள். கரும்பலகைத்திட்டம், அறிவியல் நூல்கள் வாங்கும் திட்டம் என்று ஆயிரக்கணக்கில் நூல்கள் வாங்கப்பட்டன.ஒரே செக்காக தொகை வழங்கப்பட்டது.
அப்போது தான் தமது மகளின் பெயரால் தமிழரசி பதிப்பகம் என்ற பதிப்பகம் தொடங்கினார்.மிகவும் சிரமப்பட்ட காலம் மாறி ஒரு வாழ்க்கை நிரந்தரம் கண்டார்.
மு.செல்வராசனிடம் என்னை ஈர்த்த  முக்கியப்பண்பு சுயமரியாதை. அடிக்கடி அவர் செய்த தொழில்கள் மாறிக்கொண்டே இருந்தன. ஆனால் ஒவ்வொரு தொழில் மாற்றத்தின் பின்னணியிலும் அந்த சுயமரியாதையே காரணமாக இருந்தது. அவரது போராட்ட குணத்தை வளர்த்தது. நூலகத்திற்கு நூல்கள் விநியோகம் செய்ததில்  அரசினர் செய்த குழப்பத்தால் நேர்ந்த  இழப்பீட்டிற்கு நூலக இயக்ககத்தின் மீதே வழக்குத்தொடுத்தார். எவரிடமும் தலைவணங்காத அந்தப் பண்பு இன்றளவும் எந்தப் பதிப்பாளரும்   செய்யத்துணியாத செயல் அது.
அடுத்தது தான் வளர்ந்தது போல் பிறரும் வளரவேண்டும் என்ற அவரது நல்லெண்ணம் மிகவும் அரிது .தாம் பதிப்பாளரான பின் என்னையும் பதிப்பாளர் ஆக்கினார். தம் நண்பர்களை, தம்மிடம் பணியாற்றிய ஊழியரை, தம் தம்பியை பதிப்பாளர் ஆக்கினார்.அச்சகங்களை, ஓவியரை, பிளாக் மேக்கர்களை பைண்டர்களை, அறிமுகம் செய்துவைத்தார். எந்தப்பிரதி பலனையும் எதிர்பார்க்காத அந்தப் பெருங்குணம், ஒரு நூல் வாங்காமல் விடப்பட்டிருந்தால் இயக்குநரோடு சந்திக்கச்செய்து நூலின் அருமையை எடுத்துக்கூறி வாங்க வைத்தது.
நல்ல எழுத்தின் அருமை உணர்ந்து அதைப்பாராட்டுவதில் அவர் ஒருநாளும் தயங்கியதில்லை. எந்தப்பதிப்பாளரும் தான் வெளியிடும் நூலாசிரியரின் நூலுக்கு சிறப்பான ஒரு முன்னுரை தருவதில்லை. ஆனால் அவர் அதைச்செய்தார்.தீக்குளிக்காத விட்டில்கள் என்ற நூலுக்கு அவர் எழுதியது பதிப்புரை அல்ல. முன்னுரை. அதில்-
இலக்கியம் என்பது வாழ்க்கையை - சமுதாயத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி. அவை கற்பனையில் சிருஷ்டிக்கும் கதைகளே எனினும், நிதர்சனங்களை உள்ளடக்கிய உயிர்ப் படைப்புக்கள் ஆகிவிட்டால் காலத்தையும் வென்று நிற்கின்றன.
தீக்குளிக்காத விட்டில்கள் எனும் இந்நூல்  இன்றைய இளைஞர்களின் வாழ்க்கைச் சித்திரத்தை விவரிக்கும் ஓர் அருங்காவியமாகும். இதில் வரும் கார்த்தி, சுபா, ரத்னா போன்ற உயர் பாத்திரங்கள் மூலம் ஆசிரிய நண்பர் திரு. வையவன் அவர்கள் இலட்சோப லட்சம் இளைஞர்களை அவர்களின் எதிர்பார்ப்புகளை, ஏமாற்றங்களை, நிராசைகளை,கோஷங்களால் கவரப்படும் அவர்கள் மனப்பான்மைகளை - பின்னடைவுகளை - ஆத்மார்த்த உணர்வுகளைப் படம் பிடித்துக் காட்டுகிறார்.
கதை என்கின்ற பெயரில் கன்னியர்களை துகிலுரிந்து, பாலுணர்வுகளையும், கூடிக்களிக்கும் களியாட்டங் களையும், மிருக வேட்கைகளையும் தூண்டி - மிகைப் படுத்தி நாசகரமான ஓர் சித்திரத்தை நம்பிக்கையற்று அலையாடிக் கொண்டிருக்கும் இளைஞர்களிடையே பரப்பி, ‘இதுதான் மகத்தான இன்பம் - இதுதான் வாழ்வின் லட்சியம்என்ற மாயத்தோற்றத்தை உருவாக்கி, ‘இப்படி எழுதுவதுதான் உண்மையான இலக்கியம்என்று தங்கள் புல்லுருவிதனத்தை நியாயப்படுத்திக் கொண்டிருக்கும் எண்ணற்ற பெரிய எழுத்தாளர்கள்மலிந்துவிட்ட ஓர் காலக் கட்டத்தில் வையவன் அவர்கள் தனித்து காணப்படுகிறார்.
அவருடைய படைப்புக்கள் ஆக்கும் சக்தி பெற்றவை - அழிப்பவையல்ல. நீண்ட நெடு நோக்கும், தீர்க்கமான சிந்தனையும், ஒப்புயர்வற்ற சமுதாயக் கண்ணோட்டமும் கொண்ட அவருடைய எழுத்துக்களில் ஜீவன் ததும் கூழாங்கல்லையும் வைரமாக்கும் ரஸவாதம் கைவரப் பெற்றவர் அவர். தன் படைப்புகளில் மனிதனை மனிதனாக - மாற்றுக் குறையாத தங்கமாக உயர்த்துகிறார். மனிதனில் தெய்வத்தைக் காட்டுகிறார். வாழும் நெறிகளை - முறைகளை வகைப்படுத்துகிறார். ராமனின் கால்பட்ட கல் அகல்யையாக உயிர்ப்பது போல், அவர் கைவண்ணத்தில் உருவாகும் பாத்திரங்கள் உயிரும் ஒளியும் சத்தியமும் நம்பிக்கையும் கொண்ட புதிய வார்ப்புகள்.
இதுதான் அவருடைய ஆதர்சம். இதுதான் அவருடைய எழுத்து வன்மை. இதுதான் அவருடைய தனித்துவம். இதுதான் அவர் சிருஷ்டியின் மகோன்னதம். இதுதான் அவர் வெற்றி. மொத்தத்தில் இதுதான் வையவன்.
பண்பையும் அன்பையும் ஒரு கண்களாகக் கொண்டு, எளிமையும் அமைதியுமாக வையவன் அவர்களின் படைப்புகளைக் காணும்போது, மராட்டியத்தின் எங்கோ ஓர் சிற்றூரில் ஆசிரியராக ஆடம்பரமற்று வாழ்ந்து, தன் படைப்புகளின் மூலம் மகோன்னத நிலைக்கு உயர்ந்த காண்டேகரின் நினைவு வருகிறது. இவ்விருவருக்கும் உள்ள ஒற்றுமை தொழில் மட்டுமல்ல - படைப்பாற்றலும் கூடத்தான்.ஆசிரியரின் படைப்பாற்றலை முழுதும் வெளிப்படுத்தி காலம் அவரை ஓர் தென்னாட்டு காண்டேகர்ஆக்கும். இது எனது வெறும் விருப்பம் மட்டுமல்ல; மனமார்ந்த பிரார்த்தனையுமாகும்.
இப்படி எழுத எந்தப் பதிப்பாளருக்கும் மனம் வராது. அவருக்கு வந்தது. பக்கம் பக்கமாக எழுதவேண்டிய  உறவு அது..அந்த எழுத்தாளர்- பதிப்பாளர் உறவுக்கும் மேம்பட்ட நட்புறவு. மேலே நகரவிடாமல் நினைவோடையைச் சற்றே நிற்கவைக்கும் பல சுழல்கள் கொண்டது, மனிதனின் சிறப்பு அவன் மனிதனாக இருப்பதில் தான் என்று உணர்த்தியது அது.

டாக்டர்.இ. அண்ணாமலை


டாக்டர்.இ. அண்ணாமலை

நான் அறியாமலேயே என் சிறுகதை ஒன்று ஆங்கிலத்தில் சிகாகோ பல்கலைக்கழக ஆய்வு மாணவர்களுக்காக வெளியான மெஹபில் என்ற ஏட்டில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. தி.ஜானகிராமன், ஜெயகாந்தன் உள்ளிட்ட எழுத்தாளர்களால் தமிழில் பரீட்சார்த்தமாக எழுதப்பட்ட பத்துச் சிறுகதைகளில் ஒன்று அந்த ஏட்டின் குறிப்பு கூறியது. எனது நண்பர் ஜெயகாந்தன் அதை எனக்குக்காட்டி இதை விட வேறு என்ன வேண்டும் என்று பாராட்டி நம்பிக்கை ஊட்டுவது போல் கூறினார். அதை மொழிபெயர்த்தவர் அப்போது சிகாகோ பல்கலைக்கழகப்பேராசிரியாக இருந்த டாக்டர்.இ. அண்ணாமலை அவர்கள். அது 1960  ல் ஆனந்த விகடனில் வெளியான குற்றுயிர் என்ற  என் சிறுகதை.
எப்படி இருந்தாலும் உயிரோடிருந்த ஆசிரியர் அனுமதி பெறாமல் அவருடைய கதையையோ படைப்பையோ மொழிபெயர்ப்பது காப்பிரைட் உரிமைகளைப் பாதிப்பதாகும்.அந்த உறுத்தல் எனக்குள் இருந்துகொண்டே நீடித்தது.
பிறகு பதினேழு ஆண்டுகள் கழித்து 1977  ல்  ஓராண்டு காலம் மலையாள மொழி பயில மைசூருக்கு நான் போக நேரும் என்றோ, அந்த மொழிபெயர்ப்பாளர், இந்திய மொழிகளின் மத்திய நிறுவனம், மைசூர் மானச கங்கோத்திரி யின் துணை இயக்குனராகப் பணியாற்றுவார் என்றும் நான் எதிர்பார்க்கவில்லை. அந்த நிறுவனத்தின் அடித்தளத்தில் தான் அப்போதைய தென்மொழிகளின் பயிற்றுநிறுவனம் அமைந்திருந்தது.அங்கே தமிழ்,தெலுங்கு,கன்னடம் மற்றும் மலையாளம் இவற்றில் ஏதேனும் ஒன்றைத் தாய்மொழியாகக் கொண்டிராத ஓர் பட்டதாரி ஆசிரியர் தமது பள்ளியில் தாம் தேர்ந்தெடுத்து ஓராண்டு படிக்கும் மொழியைக் கற்பிக்கவேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் தரப்படும் பயிற்சி அது. மலையாள மொழி பயில மைசூருக்கு நான் போனபோது தம் அலுவலகம் செல்ல மாடிப்படியேறுகையில் எதிர்ப்பட்டார் .டாக்டர்.இ. அண்ணாமலை அவர்கள். யாரோ அறிமுகப்படுத்த நான் தான் வையவன் என்று அறிந்ததும் உங்களிடம் அனுமதி பெறாமலேயே நான் உங்கள் சிறுகதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துவிட்டேன் என்று தவறுக்கு வருந்துவது போல் கூறிய சொற்கள்   இதை விட வேறு என்ன வேண்டும் என்று ஜெயகாந்தன் கூறியதற்கு மேலே சென்று டாக்டர்.இ. அண்ணாமலை அவர்களின் பண்பின் மேன்மையை எனக்கு உணர்த்தியது
அன்று வரை நான் ஒரு மொழியியல் அறிஞர் , மொழிபெயர்ப்பாளர் என்ற அளவில் மட்டும் தான் நான் அறிந்திருந்தேன் பின்னாளில் தமிழின் இதுவரை ஒப்புயர்வற்ற க்ரியாவின் தற்காலத்தமிழ் அகராதி என்ற மிகச்சிறந்த அகராதி ஒன்றை  க்ரியா எஸ்.  ராமகிருஷ்ணன் அவர்கள் தயாரிக்கத் திசை காட்டியவராக அமைவார் என்று தெரியாது. காட்டியது மட்டுமல்லாமல் இன்றுவரை என்னை அழைத்துக்கொண்டு போகவும் செய்திருக்கிறார் என்றும் அவருடைய மொழியியல் படிப்பு சமூகத்தின் எல்லாக்கூறுகளையும் தொடர்பு படுத்திப்பார்க்கும் வகையில் அமைந்திருப்பதைஅவருடைய உரையாடல்களில் ஒருவர் காணமுடியும். அவருடைய புலமை, பொறுமை, தெளிவு மிகவும் அரிதானவை. என்றும் இன்று க்ரியா எஸ்.  ராமகிருஷ்ணன் அவர்கள் அந்த அகராதியின் முன்னுரையில் குறிப்பிடுவதை, என்னைத் தமது இல்லத்துக்கு வரச்சொல்லி அழைத்து  காப்பி கொடுத்து உபசரித்துப் பேசும்போது உணர்ந்துகொண்டேன்.
மீண்டும் ஒருமுறை அனுமதியின்றி என் கதையை மொழிபெயர்த்ததற்கு அவர் வருத்தம் தெரிவித்தது எனக்கு கூச்சமாக இருந்தது .இவ்வளவு பெரிய எழுத்தாளராக இருந்தும் போதிய வெளியறிமுகங்கள் உங்களுக்கு இல்லாததே காரணம் என்று என் உள்ளொடுங்கிய தன்னடக்கத்தை எனக்கு உணர்த்தினார். பொதுவாக வறுமை குறித்து நான் பெரிதும் வருந்தியது இல்லை. எனினும் என் தன்னடக்கத்துக்கு ஒரு காரணமாக அதைக் கருதி பணக்காரனாக இருப்பது அதற்கே உரிய பிரச்சினைகளுக்கும் வருத்தத்திற்கும் காரணமாகிறது என்றார். அது ஒரு நல்ல பார்வை. வாழ்க்கையின் மற்றொரு பக்கத்தை , இன்று நினைத்துப்பார்த்தால் பணக்கார நாடுகளின் பிரச்சினைகளை அது  எனக்கு எடுத்துக்காட்டுகிறது.
"மலையாளம் படிக்க வந்திருக்கிறீர்கள்! இங்கே பல மொழிகள் அறிந்த , பல நாடுகளைச் சேர்ந்த பல எழுத்தாளர்களும்,பல நூல்களையும் , பல அறிஞர்களையும் சந்திக்கிற வாய்ப்பு அதிகம். பயன்படுத்திக் கொள்ளுங்கள் " என்றார்.
பயன்படுத்திக் கொண்டேன்.
நான் பயன்படுத்திக் கொள்வதற்கு வாய்ப்பாக முதல் உலக மலையாள மாநாடு அந்த ஆண்டில் நடந்தது. அங்கே நான் சந்தித்த உலகப்புகழ் பெற்ற எழுத்தாளர்களின் சந்திப்பு குறித்து நான் ஒரு தனி நூலே தான் எழுதவேண்டும். ஆனால் இது அறிஞர் அண்ணாமலை அவர்கள் ஏற்படுத்திய பாதிப்புகள் பற்றி மட்டுமே.எனவே அதைத்தவிர்க்கிறேன்.
பொதுவாக நான் சந்தித்த எழுத்துலகப் பிரமுகர்கள் மற்றொருவரை அறிமுகப்படுத்த மாட்டார்கள்.  அண்ணாமலை அவர்கள் மாறுபட்டவர். உலகப்புகழ்பெற்ற ஏ.கே.இராமானுஜம் அவர்கள் நிறுவனத்திற்கு வந்த போது என்னை அவரிடம் எ  கிரேட் ரைட்டர் என்றார். யு.ஆர்.அனந்தமூர்த்தியின் மகத்தான நாவலான ஸம்ஸ்காராவை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவரும், குறுந்தொகைப் பாடல்களை உலகறியச்செய்தவருமான ஏ.கே.இராமானுஜம் ஒரு புன்னகை செய்துவிட்டு அன்போடு கை குலுக்கினார். அந்த வெதுவெதுப்பான கைகுலுக்கலின் பரிவை இன்றும் என்னால் உணரமுடிகிறது .
அதன் பிறகு அவர்களை அப்போது கல்வி அமைச்சராக இருந்த திரு.சே.அரங்கநாயகம் அவர்கள் நிறுவனத்திற்கு வந்த போதும் நான் செயலாளர் இருந்து நடத்திய ஆண்டுவிழாவின் போதும் சந்தித்திருக்கிறேன். ஒரு புன்னகை.ஒரு கைகூப்பு. இவை தான் எங்களுக்குள் நடந்த பரிமாற்றங்கள். நான் அவரது அறிமுகத்தைப் பயன்படுத்திக்கொள்ள நினைத்ததில்லை. அவருக்கும் எத்தனையோ எழுத்தாளர்களில் நானும் ஒருவன் என்றும் தோன்றியிருக்கும்.
ஆனால் அவர் என்னை எவ்வாறு மதிப்பிட்டார் என்பது 1978  ஜூலையில் அவர் அளித்த சான்றிதழில் படைப்புத்திறன்,மொழிப் போதனையில் அவருக்குள்ள அனுபவம்  மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளில் அவருக்குள்ள புலமை மொழியுணர்வில் அவருக்குள்ள கூர்மையை அதிகப்படுத்தியுள்ளது. தனிப்பட்ட முறையில் அலட்டிக்கொள்ளாதவராகவும், நம்பத்தக்கவராகவும் சகாக்களால் நேசிக்கப்பட்டவராகவும் உள்ளார் என்றும் கலைநிகழ்ச்சிகளிலும் பிற நிகழ்ச்சிக்கலிலும் அவரது தலைமைப்பண்பை
வெளிப்படுத்தியுள்ளார் என்றும் விளக்கியது என்னை எவ்வாறு மதிப்பிட்டார் என உணர்த்தியது.       
ராண்டுகால மலையாள மொழிப்பயிற்சியின் ஓரங்கமாக விளங்கியது 15  நாட்கள் கேரளத்தில் ஆங்காங்கே தங்கி, பல்வேறு கலைநிகழ்ச்சிகளைக் கண்டு களித்துப் பெற்ற அனுபவம். ,மலையாளப் பள்ளிகளில் வகுப்பு நடத்தி,வானொலியில் பேட்டி கொடுத்து, உலக முதலாவது மலையாள மாநாட்டில் பங்கேற்று அவற்றின் ரசமான தகவல்களைத் தலைப்பு வாரியாகத் திரட்டி மஹாபலியின் மக்கள் என்றொரு நூலை எழுதினேன். தமிழக அரசின் பரிசு பெற்ற அந்த நூலுக்கு முன்னுரை எழுதினார் டாக்டர்.இ. அண்ணாமலை
ஆசிரியர் வையவன் மொழியின் மூலம், இலக்கியத்தின் மூலம் மற்றவர் எழுத்தின் மூலம் நேர்க்காட்சியின் மூலம் இந்த மக்களை உணர்ந்திருக்கிறார், அறிந்திருக்கிறார்.
இந்தியாவில் ஒரு பகுதியின் மொழியைப் பற்றி, கலாச்சாரத்தைப் பற்றி, மக்களைப் பற்றி அந்தப் பகுதி அறிஞர்களே எழுதியிருக்கிறார்கள்; அல்லது அயல் நாட்டவர்கள் எழுதியிருக்கிறார்கள்.வாழ்க்கையால், வரலாற்றால் கவரப்பட்ட ஒருவரின் அன்பு வெளிப்பாடு இது.
ஆனால் பிறபகுதி இந்தியர்கள் எழுதியிருப்பது அபூர்வம், திரு. வையவன் இந்த அபூர்வ வேலையைச் செய்திருக்கிறார்.
இந்த நூலின் விஷயக் கனம் இருக்கிறது. கேரளத்து மழைபோல் செய்திகள் - வரலாற்றுச் செய்திகள், இலக்கியச் செய்திகள், நாட்டுக் கலைச்செய்திகள், ஆதிவாசிச் செய்திகள், திரைப்படச் செய்திகள் - பொழியப்பட்டிருக்கின்றன. குளிப்பவர்கள் திக்குமுக்காடிப் போவார்கள்.
ரு பகுதியின் மொழியைப் பற்றி பிறபகுதி இந்தியர்கள் என்று அவர் சூசகமாகக் குறித்திருப்பது மொழிச்சண்டைகளில் தீவிரமாகி, ஒவ்வொருவர் உரிமைக்காக மற்றவர் உரிமைகளைப் பறிக்க நினைக்கும் இன்றைய தினத்தின் தலைமைப்பண்பாக மாறிவருவது ஓர் எழுத்தாளன் என்ற முறையில் மட்டுமின்றி, இந்தியன், மனிதன் என்ற முறையில் என்னை அதிகம் வருந்த வைக்கிறது. எனினும் பேரிடர் நேரும்போதெல்லாம் பகிரப்படும் மனித அடையாளங்கள் அற்பமோ சொற்பமோ அல்ல என்று நம்பிக்கை மீள்கிறது

Friday 9 November 2012

நாமகரணம்

முருகைய கவுண்டர்
நாமகரணம்

பெரும்பாலும் அது ஒரு முற்பகலாகத் தான் இருக்க வேண்டும். நாலு கட்டு வீட்டின் நடுவில் உள்ள வாசலில் இருந்து வெயில் மிதந்து வந்து கிழவர் முழங்காலின் மீது படிந்து மினுமினுக்கிறது . அவர் சிவப்பு. முழங்காலில் எண்ணை தடவியது போல வெயில்  அங்கே முலாம் பூசியிருக்கிறது.இரண்டு காதுகளிலும் தங்கக் கடுக்கன் நல்ல சிவப்பு. கைகள் நீளம் சாட்டை மாதிரி நீளம் உள்ளத்தில் தைப்பது போல் உற்றுப்பார்க்கிற கண்கள் . பேச்சு ஒவ்வொரு சொல்லும் கணீர் கணீர் என்று வந்து விழும்  சிரித்தால் சுற்றிலும் எல்லாரையும் வசப்படுத்துகிற பிரகாசம். அவர் வைத்த பெயர்    அவர் குந்து காலிட்டு உட்கார்ந்திருக்கிறார் . நான் அவர் முழங்கால் உயரத்திற்கு நிற்கிறேன். என் தலையை என் தோளைத் தடவி விட்டு 'இவன் என் அம்சத்தோடயே இருக்கிறாமமா! எம் பேரையே இவனுக்கு வைங்க . முருகேசன்.'
முத்தாத்தா முருகைய கவுண்டர்  சொன்னது.  ஆழ்மனக்கிணற்றின் அடிப்  பாறைகளில் தங்கி  அகல மறுத்து நிற்கின்ற நினைவின் முதல் மழைத்துளிகளில் மூத்ததாய் நிலைத்திருக்கிறது .சுற்றிலும் யார் யார் இருந்தார்கள்? நான் ஏன் அவர் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறேன் ? ஒன்றும் நினைவில்லை. ஞாபகத் தகடுகள் எதை எந்த அளவு ஏன் பதித்து வைக்கின்றன என்பது என்றும் ஒரு விளங்காத மர்மம் தான்.
அப்போது வைத்த பெயர் பிடித்ததா பிடிக்கவில்லையா என்று அறிகிற உணர்வு இல்லை. அதை வெளியிடுகிற  திறமையும் இல்லை.
 அதற்கு முன்பு இரண்டு குழந்தைகள் பிறந்து இறந்ததால் ஒரு முறத்திலே குப்பை போட்டு அதில் புரட்டி குப்பன் என்று வைத்த பெயர் தற்போது பின் தள்ளி நின்றது . அடியோடு மறைந்து போகவில்லை . முருகேசனுக்கு வழிவிட்டு பிணககத்தோடு நின்றது. இன்னும் எனனை குப்பன் என்று அறிந்தவர்களும் அழைப்பவர்களும் எங்கோ இருந்து கொண்டு தானிருக்கிறார்கள்
இப்படிக் குப்பன் , பிச்சை, என்று மரணமே அட சீ! இதையெல்லாம் மதித்து ஏன் உயிர் வாங்க வேண்டும் என்று  அலட்சியப் படுத்துகிற பெயர் வைத்தால்  இரண்டு மூன்று பிரசவங்கள் வீணாகிப்  பின்  பிறக்கிற  குழந்தை தப்பும் என்று ஒரு கணக்கு வைத்திருக்கிறது கிராமம்
எத்தனைப் பேருக்குத் தனக்கு வைக்கப்பட்ட பெயர் பிடித்திருக்கிறது? பிடிக்கிறதோ இல்லையோ நம் முகம் போல நம் உடல் உறுப்புகளில் ஒன்று போல கூடவே வாழ்ந்து பழகி விட்டதால் அதை ஏற்றுக்கொண்டு போகிறோம்.
'நான் உங்கள் அம்சத்தோடு பிறந்திருந்தால் உங்கள் பெயரை ஏன் வைக்கச் சொல்கிறீர்கள்?உங்கள் அம்சத்தோடு பிறந்திருப்பதாக நீங்கள் நினைப்பது சரியாகிவிடுமா? நாம் யார் அம்சத்தோடும் பிறக்க வில்லை. நான் என் அம்சத்தோடு தான் பிறந்திருக்கிறேன் .எனக்கு நானே பெயர் வைத்துக்கொள்வேன் ' இப்படிக் கேட்காமல் போன கேள்விகளின் எதிர்வினை போலத்தான் நானே  எனக்கு வையவன் என்று பெயர் வைத்துக்கொண்டேன் முருகேசனும் பிடிக்காமல் போனதே காரணம்
தற்போது பெயர் வைக்கும் வல்லுனர்கள் பெருகிவிட்டார்கள் . வைத்த பெயரிலேயே சிறு மாற்றம் சொல்கிறார்கள் .பிறந்த தேதியைக் கணக்குப் போட்டு ஒரு பெயர் தேர்ந்தெடுக்கிறார்கள் .வைத்த பெயர் விளங்குகிறதா ? தீர்த்துச் சொல்லமுடிவதில்லை. ஏதோ ஒரு ஆறுதலில் எல்லாம் சரியென்று சொல்லத்தோன்றும் , உள்ளத்தில் முழு திருப்தி வராது.
என்னைப் பொறுத்தவரை குப்பன் முருகேசனாகி , முருகேசன் வையவன் ஆன போதும் ஆதங்கம் போகவில்லை. என்ன மடத்தனமாகப் பெயர் வைத்துக்கொண்டோம் . வையவன் என்று நம் பெயர் சொன்னால் என்ன விஜயனா  ? வைரவனா? என்று கேட்டு வை. .ய... வ ...ன் என்று எழுத்து எழுத்தாகச் சொனனால் மனசில் சிரமப்பட்டு பதிய வைத்துக்கொண்டவர்களே பலர். இதில் ஜெயம் வரவில்லை . ஜங்கார ஹூங்காரம் வரவில்லை. ஏதோ வாலை மடக்கி ஓடுகிற நாயோ பூனையோ போல ஒரு சாது த்வனி !
அப்படி ஒரு பெயர் வைத்துக்கொண்டிருந்தால் அப்போது என்ன தோன்றியிருக்குமோ?
முருகைய கவுண்டர் என்ற பெயரோடு வாழ்ந்து மறைந்த என் முத்தாத்தா விற்கு அவர் பெயர் பிடித்து இருந்திருக்குமா? அவருக்கு யார் பெயர் வைத்திருப்பார்கள்?

வையவன்

 

Friday 27 July 2012

நான் சந்தித்த மனிதர்கள் , அனுபவங்கள்

ஈஸ்வரோ ரக்ஷது 

மனிதர்கள் ஒரே மாதிரி இல்லை; இருக்க முடியாது .அதே போல அவர்களுக்கு  ஒரு பக்கம் தான் உண்டு என்பதில்லை. ஒரு நேரம் நல்ல முகம் காட்டுகிறது .மற்றோர் நேரம் மாற்று முகம் காட்டுகிறது.
வாழ்க்கையும் அப்படித்தான் இருக்கிறது. நல்லது. நல்லது அல்லாதது . இப்படிப் பல பக்கங்கள் 
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் மாறி மாறிப் பல பக்கங்கள் வந்து போகின்றன. ஒருவர் அடே, நாமா இப்படி இருந்தோம்? அடடே , நாம் இப்படியும் இருந்திருக்கிறோமா? இப்படித் திரும்பிய பக்கங்கள் எனக்குள் எத்தனையோ!
இந்தப் பகுதியில் நான் சந்தித்த மனிதர்கள் , அனுபவங்கள் , கண்டது ,கேட்டது, 
பட்டது, தொட்டது, விட்டது , வேண்டியது, கிட்டியது , கிட்டாதது  எனப் பல பதிவுகளைப் பதிக்கத்தோன்றியதால் இதைத் தொடங்குகிறேன். துவக்கத்தில் இதற்கு ஈஸ்வரோ ரக்ஷது என்ற தலைப்பு விருப்பு வெறுப்பிற்கும் விவாதங்களுக்கும் ஆளானாலும் இவ்வாறு தான் துவக்கத் தோன்றுகிறது ரக்ஷிக்கப் படுகிறோம் என்ற உணர்வும் பின்னணியில் ஒரு மகாசக்தி இருந்து நம்மைக் காப்பாற்றிக் கொண்டே வருகிறது என்ற உணர்வும் அடிக்கடி வந்தவாறு உள்ளன 
அதெல்லாம் ஒரு மனப்பிரமை என்று என் மனசிலேயே ஒரு பக்கம் வந்து புரள்கிறது .
மனம் இருப்பதால் பிரமை வருகிறது 
மனமே ஓர் பிரமை என்று மகான்கள் கூறுகிறார்கள். 
அதை... அந்தப்  பிரமையின் ஒவ்வொரு திரைகளையும் விளக்கி விளக்கித் தான் அவர்கள் கண்டு பிடித்திருக்க முடியும். 
ரக்ஷிக்கப் படுகிறோம் 
ரக்ஷிக்கிற மகாசக்தி ஒன்று உண்டு  என்று அறவே நம்பாதவர் ஒருவர் இருப்பது சாத்தியமல்ல. 
அப்படி ஒருவர் இருந்தால் அவருக்கும் அவர் தவிர்த்த பிறருக்குமாக பிரார்த்திப்போம் 
ஈஸ்வரோ ரக்ஷது 
வையவன்