ஈஸ்வரோ ரக்ஷது
மனிதர்கள் ஒரே மாதிரி இல்லை; இருக்க முடியாது .அதே போல அவர்களுக்கு ஒரு பக்கம் தான் உண்டு என்பதில்லை. ஒரு நேரம் நல்ல முகம் காட்டுகிறது .மற்றோர் நேரம் மாற்று முகம் காட்டுகிறது.
வாழ்க்கையும் அப்படித்தான் இருக்கிறது. நல்லது. நல்லது அல்லாதது . இப்படிப் பல பக்கங்கள்
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் மாறி மாறிப் பல பக்கங்கள் வந்து போகின்றன. ஒருவர் அடே, நாமா இப்படி இருந்தோம்? அடடே , நாம் இப்படியும் இருந்திருக்கிறோமா? இப்படித் திரும்பிய பக்கங்கள் எனக்குள் எத்தனையோ!
இந்தப் பகுதியில் நான் சந்தித்த மனிதர்கள் , அனுபவங்கள் , கண்டது ,கேட்டது,
பட்டது, தொட்டது, விட்டது , வேண்டியது, கிட்டியது , கிட்டாதது எனப் பல பதிவுகளைப் பதிக்கத்தோன்றியதால் இதைத் தொடங்குகிறேன். துவக்கத்தில் இதற்கு ஈஸ்வரோ ரக்ஷது என்ற தலைப்பு விருப்பு வெறுப்பிற்கும் விவாதங்களுக்கும் ஆளானாலும் இவ்வாறு தான் துவக்கத் தோன்றுகிறது ரக்ஷிக்கப் படுகிறோம் என்ற உணர்வும் பின்னணியில் ஒரு மகாசக்தி இருந்து நம்மைக் காப்பாற்றிக் கொண்டே வருகிறது என்ற உணர்வும் அடிக்கடி வந்தவாறு உள்ளன
அதெல்லாம் ஒரு மனப்பிரமை என்று என் மனசிலேயே ஒரு பக்கம் வந்து புரள்கிறது .
மனம் இருப்பதால் பிரமை வருகிறது
மனமே ஓர் பிரமை என்று மகான்கள் கூறுகிறார்கள்.
அதை... அந்தப் பிரமையின் ஒவ்வொரு திரைகளையும் விளக்கி விளக்கித் தான் அவர்கள் கண்டு பிடித்திருக்க முடியும்.
ரக்ஷிக்கப் படுகிறோம்
ரக்ஷிக்கிற மகாசக்தி ஒன்று உண்டு என்று அறவே நம்பாதவர் ஒருவர் இருப்பது சாத்தியமல்ல.
அப்படி ஒருவர் இருந்தால் அவருக்கும் அவர் தவிர்த்த பிறருக்குமாக பிரார்த்திப்போம்
ஈஸ்வரோ ரக்ஷது
வையவன்