டாக்டர்.இ. அண்ணாமலை
நான் அறியாமலேயே என் சிறுகதை ஒன்று ஆங்கிலத்தில்
சிகாகோ பல்கலைக்கழக ஆய்வு மாணவர்களுக்காக வெளியான மெஹபில் என்ற ஏட்டில்
பிரசுரிக்கப்பட்டிருந்தது. தி.ஜானகிராமன், ஜெயகாந்தன் உள்ளிட்ட எழுத்தாளர்களால் தமிழில்
பரீட்சார்த்தமாக எழுதப்பட்ட பத்துச் சிறுகதைகளில் ஒன்று அந்த ஏட்டின் குறிப்பு
கூறியது. எனது நண்பர் ஜெயகாந்தன் அதை எனக்குக்காட்டி இதை விட வேறு என்ன வேண்டும்
என்று பாராட்டி நம்பிக்கை ஊட்டுவது போல் கூறினார். அதை மொழிபெயர்த்தவர் அப்போது சிகாகோ
பல்கலைக்கழகப்பேராசிரியாக இருந்த டாக்டர்.இ. அண்ணாமலை அவர்கள். அது 1960 ல் ஆனந்த விகடனில் வெளியான குற்றுயிர்
என்ற என் சிறுகதை.
எப்படி இருந்தாலும் உயிரோடிருந்த ஆசிரியர் அனுமதி பெறாமல் அவருடைய கதையையோ படைப்பையோ மொழிபெயர்ப்பது காப்பிரைட் உரிமைகளைப் பாதிப்பதாகும்.அந்த உறுத்தல் எனக்குள் இருந்துகொண்டே நீடித்தது.
எப்படி இருந்தாலும் உயிரோடிருந்த ஆசிரியர் அனுமதி பெறாமல் அவருடைய கதையையோ படைப்பையோ மொழிபெயர்ப்பது காப்பிரைட் உரிமைகளைப் பாதிப்பதாகும்.அந்த உறுத்தல் எனக்குள் இருந்துகொண்டே நீடித்தது.
பிறகு பதினேழு ஆண்டுகள் கழித்து 1977 ல் ஓராண்டு காலம் மலையாள மொழி பயில மைசூருக்கு
நான் போக நேரும் என்றோ, அந்த
மொழிபெயர்ப்பாளர், இந்திய மொழிகளின்
மத்திய நிறுவனம், மைசூர் மானச
கங்கோத்திரி யின் துணை இயக்குனராகப் பணியாற்றுவார் என்றும் நான்
எதிர்பார்க்கவில்லை. அந்த நிறுவனத்தின் அடித்தளத்தில் தான் அப்போதைய தென்மொழிகளின்
பயிற்றுநிறுவனம் அமைந்திருந்தது.அங்கே தமிழ்,தெலுங்கு,கன்னடம் மற்றும் மலையாளம் இவற்றில் ஏதேனும் ஒன்றைத்
தாய்மொழியாகக் கொண்டிராத ஓர் பட்டதாரி ஆசிரியர் தமது பள்ளியில் தாம்
தேர்ந்தெடுத்து ஓராண்டு படிக்கும் மொழியைக் கற்பிக்கவேண்டும் என்ற நோக்கத்தின்
அடிப்படையில் தரப்படும் பயிற்சி அது. மலையாள மொழி பயில மைசூருக்கு நான் போனபோது தம் அலுவலகம் செல்ல மாடிப்படியேறுகையில்
எதிர்ப்பட்டார் .டாக்டர்.இ. அண்ணாமலை அவர்கள். யாரோ அறிமுகப்படுத்த நான் தான்
வையவன் என்று அறிந்ததும் உங்களிடம் அனுமதி பெறாமலேயே நான் உங்கள் சிறுகதையை
ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துவிட்டேன் என்று தவறுக்கு வருந்துவது போல் கூறிய
சொற்கள் இதை விட வேறு என்ன வேண்டும்
என்று ஜெயகாந்தன் கூறியதற்கு மேலே சென்று டாக்டர்.இ. அண்ணாமலை அவர்களின் பண்பின்
மேன்மையை எனக்கு உணர்த்தியது
அன்று வரை நான் ஒரு மொழியியல் அறிஞர் , மொழிபெயர்ப்பாளர் என்ற அளவில் மட்டும் தான் நான்
அறிந்திருந்தேன் பின்னாளில் தமிழின் இதுவரை ஒப்புயர்வற்ற க்ரியாவின் தற்காலத்தமிழ்
அகராதி என்ற மிகச்சிறந்த அகராதி ஒன்றை
க்ரியா எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் “தயாரிக்கத் திசை காட்டியவராக அமைவார் என்று தெரியாது. காட்டியது மட்டுமல்லாமல்
இன்றுவரை என்னை அழைத்துக்கொண்டு போகவும் செய்திருக்கிறார் என்றும் அவருடைய
மொழியியல் படிப்பு சமூகத்தின் எல்லாக்கூறுகளையும் தொடர்பு படுத்திப்பார்க்கும்
வகையில் அமைந்திருப்பதைஅவருடைய உரையாடல்களில் ஒருவர் காணமுடியும். அவருடைய புலமை, பொறுமை, தெளிவு மிகவும்
அரிதானவை.” என்றும் இன்று க்ரியா எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் அந்த அகராதியின்
முன்னுரையில் குறிப்பிடுவதை, என்னைத் தமது இல்லத்துக்கு வரச்சொல்லி அழைத்து காப்பி கொடுத்து உபசரித்துப் பேசும்போது
உணர்ந்துகொண்டேன்.
மீண்டும் ஒருமுறை அனுமதியின்றி என் கதையை மொழிபெயர்த்ததற்கு அவர் வருத்தம்
தெரிவித்தது எனக்கு கூச்சமாக இருந்தது .இவ்வளவு பெரிய எழுத்தாளராக இருந்தும் போதிய
வெளியறிமுகங்கள் உங்களுக்கு இல்லாததே காரணம் என்று என் உள்ளொடுங்கிய தன்னடக்கத்தை
எனக்கு உணர்த்தினார். பொதுவாக வறுமை குறித்து நான் பெரிதும் வருந்தியது இல்லை.
எனினும் என் தன்னடக்கத்துக்கு ஒரு காரணமாக அதைக் கருதி பணக்காரனாக இருப்பது அதற்கே
உரிய பிரச்சினைகளுக்கும் வருத்தத்திற்கும் காரணமாகிறது என்றார். அது ஒரு நல்ல
பார்வை. வாழ்க்கையின் மற்றொரு பக்கத்தை , இன்று நினைத்துப்பார்த்தால் பணக்கார நாடுகளின் பிரச்சினைகளை
அது எனக்கு எடுத்துக்காட்டுகிறது.
"மலையாளம் படிக்க
வந்திருக்கிறீர்கள்! இங்கே பல மொழிகள் அறிந்த , பல நாடுகளைச் சேர்ந்த பல எழுத்தாளர்களும்,பல நூல்களையும் , பல அறிஞர்களையும்
சந்திக்கிற வாய்ப்பு அதிகம். பயன்படுத்திக் கொள்ளுங்கள் " என்றார்.
பயன்படுத்திக் கொண்டேன்.
நான் பயன்படுத்திக் கொள்வதற்கு வாய்ப்பாக முதல் உலக மலையாள மாநாடு அந்த
ஆண்டில் நடந்தது. அங்கே நான் சந்தித்த உலகப்புகழ் பெற்ற எழுத்தாளர்களின் சந்திப்பு
குறித்து நான் ஒரு தனி நூலே தான் எழுதவேண்டும். ஆனால் இது அறிஞர் அண்ணாமலை அவர்கள்
ஏற்படுத்திய பாதிப்புகள் பற்றி மட்டுமே.எனவே அதைத்தவிர்க்கிறேன்.
பொதுவாக நான் சந்தித்த எழுத்துலகப் பிரமுகர்கள் மற்றொருவரை அறிமுகப்படுத்த
மாட்டார்கள். அண்ணாமலை அவர்கள்
மாறுபட்டவர். உலகப்புகழ்பெற்ற ஏ.கே.இராமானுஜம் அவர்கள் நிறுவனத்திற்கு வந்த போது
என்னை அவரிடம் எ கிரேட் ரைட்டர் என்றார்.
யு.ஆர்.அனந்தமூர்த்தியின் மகத்தான நாவலான ஸம்ஸ்காராவை ஆங்கிலத்தில்
மொழிபெயர்த்தவரும், குறுந்தொகைப்
பாடல்களை உலகறியச்செய்தவருமான ஏ.கே.இராமானுஜம் ஒரு புன்னகை செய்துவிட்டு அன்போடு
கை குலுக்கினார். அந்த வெதுவெதுப்பான கைகுலுக்கலின் பரிவை இன்றும் என்னால்
உணரமுடிகிறது .
அதன் பிறகு அவர்களை அப்போது கல்வி அமைச்சராக இருந்த திரு.சே.அரங்கநாயகம்
அவர்கள் நிறுவனத்திற்கு வந்த போதும் நான் செயலாளர் இருந்து நடத்திய ஆண்டுவிழாவின்
போதும் சந்தித்திருக்கிறேன். ஒரு புன்னகை.ஒரு கைகூப்பு. இவை தான் எங்களுக்குள்
நடந்த பரிமாற்றங்கள். நான் அவரது அறிமுகத்தைப் பயன்படுத்திக்கொள்ள நினைத்ததில்லை.
அவருக்கும் எத்தனையோ எழுத்தாளர்களில் நானும் ஒருவன் என்றும் தோன்றியிருக்கும்.
ஆனால் அவர் என்னை எவ்வாறு மதிப்பிட்டார் என்பது 1978 ஜூலையில் அவர் அளித்த சான்றிதழில்
படைப்புத்திறன்,மொழிப் போதனையில்
அவருக்குள்ள அனுபவம் மற்றும் ஒன்றுக்கு
மேற்பட்ட மொழிகளில் அவருக்குள்ள புலமை மொழியுணர்வில் அவருக்குள்ள கூர்மையை
அதிகப்படுத்தியுள்ளது. தனிப்பட்ட முறையில் அலட்டிக்கொள்ளாதவராகவும், நம்பத்தக்கவராகவும்
சகாக்களால் நேசிக்கப்பட்டவராகவும் உள்ளார் என்றும் கலைநிகழ்ச்சிகளிலும் பிற
நிகழ்ச்சிக்கலிலும் அவரது தலைமைப்பண்பை
வெளிப்படுத்தியுள்ளார் என்றும் விளக்கியது என்னை எவ்வாறு மதிப்பிட்டார் என
உணர்த்தியது.
ஓராண்டுகால மலையாள
மொழிப்பயிற்சியின் ஓரங்கமாக விளங்கியது 15
நாட்கள் கேரளத்தில் ஆங்காங்கே தங்கி, பல்வேறு கலைநிகழ்ச்சிகளைக் கண்டு களித்துப் பெற்ற அனுபவம். ,மலையாளப் பள்ளிகளில்
வகுப்பு நடத்தி,வானொலியில் பேட்டி
கொடுத்து, உலக முதலாவது மலையாள
மாநாட்டில் பங்கேற்று அவற்றின் ரசமான தகவல்களைத் தலைப்பு
வாரியாகத் திரட்டி மஹாபலியின் மக்கள் என்றொரு நூலை எழுதினேன். தமிழக அரசின் பரிசு
பெற்ற அந்த நூலுக்கு முன்னுரை எழுதினார் டாக்டர்.இ. அண்ணாமலை
“ஆசிரியர் வையவன் மொழியின் மூலம், இலக்கியத்தின் மூலம் மற்றவர் எழுத்தின் மூலம்
நேர்க்காட்சியின் மூலம் இந்த மக்களை உணர்ந்திருக்கிறார், அறிந்திருக்கிறார்.
இந்தியாவில் ஒரு பகுதியின் மொழியைப் பற்றி,
கலாச்சாரத்தைப்
பற்றி, மக்களைப் பற்றி அந்தப்
பகுதி அறிஞர்களே எழுதியிருக்கிறார்கள்; அல்லது அயல் நாட்டவர்கள்
எழுதியிருக்கிறார்கள்.வாழ்க்கையால், வரலாற்றால் கவரப்பட்ட
ஒருவரின் அன்பு வெளிப்பாடு இது.
ஆனால் பிறபகுதி இந்தியர்கள் எழுதியிருப்பது அபூர்வம், திரு. வையவன் இந்த அபூர்வ வேலையைச் செய்திருக்கிறார்.
இந்த நூலின் விஷயக் கனம் இருக்கிறது. கேரளத்து மழைபோல் செய்திகள் - வரலாற்றுச்
செய்திகள், இலக்கியச் செய்திகள், நாட்டுக் கலைச்செய்திகள், ஆதிவாசிச்
செய்திகள், திரைப்படச் செய்திகள் -
பொழியப்பட்டிருக்கின்றன. குளிப்பவர்கள் திக்குமுக்காடிப் போவார்கள்.’
‘ஒரு பகுதியின் மொழியைப் பற்றி பிறபகுதி இந்தியர்கள்’ என்று அவர் சூசகமாகக் குறித்திருப்பது மொழிச்சண்டைகளில்
தீவிரமாகி, ஒவ்வொருவர் உரிமைக்காக
மற்றவர் உரிமைகளைப் பறிக்க நினைக்கும் இன்றைய தினத்தின் தலைமைப்பண்பாக மாறிவருவது
ஓர் எழுத்தாளன் என்ற முறையில் மட்டுமின்றி, இந்தியன், மனிதன் என்ற
முறையில் என்னை அதிகம் வருந்த வைக்கிறது. எனினும் பேரிடர் நேரும்போதெல்லாம்
பகிரப்படும் மனித அடையாளங்கள் அற்பமோ சொற்பமோ அல்ல என்று நம்பிக்கை மீள்கிறது

No comments:
Post a Comment